கனேடிய நீதிமன்றின் உத்தரவை சவால் செய்த X நிறுவனம்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிவில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி,ஒப்புதல் இல்லாத அந்தரங்கப் படமொன்றை உலக அளவில் நீக்காமல், கனடாவில் மட்டும் முடக்கிய சமூக ஊடக நிறுவனமான X, அந்த உத்தரவுக்கு சட்டரீதியாக சவால் விடுத்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் மாற்றுப்பாலினத்தவர் ஒருவர், தனது அந்தரங்கப் படம் ஒப்புதல் இல்லாமல் சமூக ஊடகமான X-இல் வெளியிடப்பட்டதாக முறைப்பாடு அளித்தார்.
இந்தச் சட்டவிரோதப் படத்தை X தளத்திலிருந்து முற்றிலும் நீக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், X நிறுவனம், அந்தப் படத்தை கனடாவில் மட்டும் பார்க்க முடியாதபடி தடுத்தது. ஆனால், உலகில் உள்ள மற்ற நாடுகளில் இருந்து அதைப் பார்க்க அனுமதித்தது.
இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவு "உலகம் முழுவதும்" அந்தப் படத்தை நீக்க வேண்டும் என்று கூறியது. கனடாவில் மட்டும் தடுப்பது என்பது முழுமையான பாதுகாப்பு அல்ல என்று கூறி, நீதிமன்றம் X நிறுவனத்துக்கு 100,000 டொலர் அபராதம் விதித்தது.
உலகளவில் ஒரு படத்தை நீக்க உத்தரவிடுவது, மற்ற நாடுகளின் சட்ட அதிகாரத்தை மீறுவதாகும் என்றும், இது உலகெங்கிலும் உள்ள பேச்சுரிமைக்கு அச்சுறுத்தல் என்றும் X நிறுவனம் கூறி, அபராதத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சட்டமா அதிபர் நிகி ஷர்மா, "பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான பாதுகாப்பு கிடைக்க, இந்தப் படம் விதிவிலக்கு இல்லாமல் நீக்கப்பட வேண்டும். கனடாவில் மட்டும் தடுப்பது போதாது," என்று கூறி, X நிறுவனத்தின் சவாலை எதிர்த்து வழக்கில் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.