கொரோனாவை அடுத்து பீதியை ஏற்படுத்தும் 'எக்ஸ்' நோய்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வைராலஜி மருத்துவர் டாக்டர் பீட்டர் பயட் 1976ம் ஆண்டு எபோலா வைரஸை கண்டறிந்தார். இந்நிலையில் அவர் தற்போது ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 'எக்ஸ்' நோய் (Disease X) என்ற ஓர் புதிய வைரஸ் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மழைக் காடுகளில் இருந்து பரவி உள்ளதாகவும், இந்த வைரஸ் விரைவில் உலக நாடுகளுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 15 லட்சம் பேர் பலியாகி உள்ள நிலையில் தற்பொழுது 'எக்ஸ்' நோய் என்ற வைரஸ் தாக்கத்துக்கு எதிர்காலத்தில் பலர் பலியாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். இது கொரோனா வைரஸை காட்டிலும் பன்மடங்கு ஆற்றல் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை எக்ஸ் என்பது எதிர்பாராததைக் குறிக்கும் எனவும், 'எக்ஸ்' நோய் என்பது இப்போது கற்பனையானது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 1976-ஆம் ஆண்டு, எபோலா வைரஸ் குறித்த சோதனையில் பீட்டர் பயட் ஈடுபட்டார். அப்போது அவருக்கு உதவிகரமாக இருந்த மருத்துவ விஞ்ஞானி ஜீன் ஜாக்குவஸ் டம்ஃபாம். இவர் தற்போது சிஎன்என் இதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் பேசிய சீன், 'காலாகாலமாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் தாக்கம் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் மஞ்சள் காய்ச்சல், ரேபிஸ் உள்ளிட்ட பல நோய்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களைத் தாக்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸ் வவ்வால்கள் மூலமாக மனிதர்களுக்குப் பரவி உள்ளது. இதுபோன்று வரும் நாட்களில் மனிதர்களுக்கு விலங்குகளிடமிருந்து வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எபோலா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் அறிகுறிகள் போலவே தற்போது 'எக்ஸ்' நோய் வைரஸ் காய்ச்சலினால் தாக்கப்படுவார்களுக்கு அறிகுறிகள் ஏற்படும்.
அத்துடன் சமீபத்தில் காங்கோவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இந்த 'எக்ஸ்' நோய் அறிகுறி தென்படத் துவங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து சுகாதார நிறுவனமும் ஆப்பிரிக்க மக்கள் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.