பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
பங்களாதேஷ் பாடசாலை ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று பங்களாதேஷ் விமான படை விமானம் (எப்.7 பிஜிஐ) பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
உத்தரா என்ற இடத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானம் மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரி வளாகத்தில் நொறுங்கி விழுந்து தீப்பற்றி எரிந்தது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், ஆசிரியர்கள்
விமான விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நொறுங்கி விழுந்து தீப்பிடித்த விமானத்தில் தீ மளமளவென எரிந்தது. தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
பங்களாதேஷ் தீயணைப்பு துறையின் இயக்குனர் ஜெனரல் சாகீத் கமால் கூறுகையில், 'விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் 27 உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், ஆசிரியர்கள் என கூறப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த 170 பேர் வைத்தியசாலையிலி் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விமானத்தை இயக்கிய பைலட் முகமது தவ்கீர் இஸ்லாம் இராணுவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
அதேவேளை இந்தியாவில் கடந்த மாதம் லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 260 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.