அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி
அவுஸ்திரேலியர்களிடையே பிரபலமான பல சுற்றுலா நாடுகளில் டெங்கு நோய் பரவி வரும் நிலையில், அந்த நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, டெங்கு தடுப்பூசியை மருத்துவர்கள் பரிந்துரைத்து வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலிய நோய்த்தடுப்பு ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, முன்னர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னர் டெங்கு நோயால் பாதிக்கப்படாத நான்கு வயதுக்கு மேற்பட்டவர்கள், டெங்கு அபாயம் அதிகமுள்ள நாடுகளுக்கு குறுகிய காலப் பயணங்களை மேற்கொள்ளும்போது, மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் புதிய வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பதிவாகும் டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா, வியட்நாம் மற்றும் பிஜி உள்ளிட்ட டெங்கு அபாயம் அதிகமுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.