வெளிநாடொன்றில் இடம்பெற்ற விபத்து சம்பவங்கள்... 34 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
துருக்கியில் இடம்பெற்ற வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி 34 பேர் பலியாகி உள்ளனர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி நாட்டின் காஜியன்தெப் மாகாணத்தில் நிஜிப் மற்றும் மாகாண தலைநகர் காஜியன்தெப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி மற்றும் வாகனம் ஒன்றின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 15 பேர் வரை உயிரிழந்தனர். 31 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 துணை நிலை மருத்துவ மாணவர்கள், 3 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 2 பத்திரிகையாளர்களும் அடங்குவார்கள்.
இதேபோன்று இந்த விபத்து நடப்பதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்பு, மார்தின் மாகாணத்தில் தெரீக் என்ற பகுதியில் பாதசாரிகள் மீது லாரி ஓட்டுனர் ஒருவர் மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார்.
இந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 30 பேர் வரை காயமடைந்தனர். லாரியின் பிரேக் சரியாக பிடிக்காததில் கூட்டத்தினர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சுகாதார மந்திரி பாரெத்தின் கோக்கா இதுபற்றி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி இரு தனிப்பட்ட விசாரணைகள் நடந்து வருகின்றன என நீதி மந்திரி பெகிர் போஜ்டாக் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, உள்துறை மந்திரி சுலேமான் சொய்லுவை விபத்து நடந்த சம்பவ பகுதிக்கு அந்நாட்டு ஜனாதிபதி டையீப் எர்டோகன் அனுப்பியுள்ளார்.