சிந்து நீரை இந்தியா நிறுத்தினால் பேரழிவு உறுதி ; பாகிஸ்தான் பாலைவனமாகும்
அவுஸ்திரேலியாவில் உள்ள பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் வெளியிட்ட 2025ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் அறிக்கையில், இந்தியா சிந்து நதி நீரை முழுமையாக நிறுத்தினால் அல்லது கணிசமாகக் குறைத்தால், பாகிஸ்தானில் மிகக் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானின் விவசாயத் துறையில் சுமார் 80 வீதம் சிந்து நதி அமைப்பையே நம்பி உள்ளது. முக்கியமான தருணங்களில் நீரோட்டத்தில் ஏற்படும் சிறிய தடங்கல்கள் கூட பாகிஸ்தான் விவசாயத்தைப் பாதிக்கலாம்.

தற்போது பாகிஸ்தானில் உள்ள அணைகளால் சுமார் 30 நாட்களுக்குத் தேவையான நீரை மட்டுமே சேமித்து வைக்க முடியும். நீண்ட காலம் நீர் வராமல் போனால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும். சிந்து நதி நீர் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் பாகிஸ்தானின் உணவுப் பாதுகாப்பை நேரடியாக அச்சுறுத்தும்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இந்தியா அறிவித்தது. அதன் பிறகு, கடந்த மே மாதம் இந்தியா தனது சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அப்போது அணைகளை மூடியதன் விளைவாக, பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள செனாப் ஆற்றின் நீரோட்டம் பல நாட்களுக்கு நின்றது. பின்னர் மதகுகள் திறக்கப்பட்டபோது வண்டல் மண் நிறைந்த வெள்ளம் பாய்ந்தது.
இந்தியாவிடம் சிந்து நதி நீர் ஓட்டத்தை முழுமையாக நிறுத்தும் உட்கட்டமைப்பு தற்போது இல்லை என்றாலும், நீரோட்டத்தில் சிறியளவில் பாதிப்பு ஏற்பட்டாலும்கூட அது பாகிஸ்தானுக்குக் குறுகிய காலத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது