எனக்குப் பெருமையளிக்கிறது ; போர் நிறுத்தம் குறித்து ட்ரம்பின் தகவல்
ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். பாகிஸ்தான் முன்வைத்த ஒரு முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாகக் கூறி, ட்ரம்ப் `ட்ரூத் சோஷியல்' தளத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
அந்த முன்மொழிவு, இரண்டு வார காலத்திற்குப் போர் நடவடிக்கைகளை நிறுத்தி, ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்கக் கோருகிறது. ஈரானுடன் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, அமெரிக்கா இந்த இரண்டு வார கால அவகாசத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் என்று ட்ரம்ப் கூறினார்.

பத்து அம்ச முன்மொழிவு
அந்த பதிவில், "பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், இன்று இரவு ஈரானுக்கு அனுப்பப்படும் அழிவுகரமான சக்தியை நிறுத்தி வைக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
மேலும், ஈரான் இஸ்லாமிய குடியரசு, ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொண்டால், ஈரான் மீதான குண்டுவீச்சையும், தாக்குதலையும் இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன்.
இது ஒரு இருதரப்பு போர்நிறுத்தமாக இருக்கும்! ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஒரு திட்டவட்டமான உடன்படிக்கையை எட்டுவதில் வெகுதூரம் முன்னேறிவிட்டோம்.
ஈரானிடம் இருந்து பத்து அம்ச முன்மொழிவை பெற்றுள்ளோம். மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அது ஒரு நடைமுறைக்கு உகந்த அடிப்படை என்று நம்புகிறோம். கடந்த கால கருத்து வேறுபாடுகளின் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் இந்த இரண்டு வார கால அவகாசம், உடன்படிக்கையை இறுதி செய்து நிறைவு செய்வதற்கு வழிவகுக்கும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியாகவும், மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதியாகவும், இந்த நீண்டகால பிரச்சினை ஒரு தீர்வின் விளிம்பை எட்டியிருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது." என தெரிவித்துள்ளார்.