ஒன்டாரியோவின் 5 மருத்துவமனைகளில் தொடர் திருட்டு
கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் டொராண்டோ பெரும்பாக பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, பர்லிங்டனைச் சேர்ந்த 34 வயது பெண் மீது ஒரிலியா பொலிஸார் பல குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட கூடுதல் நபர்கள் இருக்கக்கூடும் என்பதால் பொலிஸார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
வெஸ்ட் பார்க் ஹெல்த்கேர் சென்டர், செயின்ட் ஜோசப்ஸ் ஹெல்த்கேர் சென்டர், ஒரிலியா சோல்ஜர்ஸ் மெமோரியல் மருத்துவமனை, டிரில்லியம் ஹெல்த் பார்ட்னர்ஸ் - மிசிசாகா மருத்துவமனை, ஹெட்வாட்டர்ஸ் ஹெல்த்கேர் சென்டர் ஆகிய மருத்துவமனைகளில் திருட்டு மற்றும் மோசடிகள் பதிவாகியுள்ளன.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடமிருந்து திருட்டு மற்றும் மோசடி தொடர்பாக அடுத்தடுத்து வந்த புகார்களைத் தொடர்ந்தே இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
பொலிஸார் நடத்திய பல சோதனைகள் மூலம் பெருமளவிலான திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையின் முடிவில், பர்லிங்டன் பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட காலக்கட்டங்களில் இந்த மருத்துவமனைகளுக்கு வருகை தந்த நோயாளிகள், பார்வையாளர்கள் அல்லது ஊழியர்கள் தங்கள் வங்கி மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏதேனும் அனுமதியற்ற நிதிப் பரிவர்த்தனைகள் அல்லது திருட்டுகள் நடந்திருப்பதை உணர்ந்தால், உடனடியாக ஒரிலியா பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.