ஹீலியம் ஆலையின் மீது ட்ரோன்கள் தாக்குதல் ; பெரும் சிக்கலில் ரஷ்யா
ரஷ்யாவின் ஒற்றை ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஒரென்பர்க் பகுதியிலுள்ள, அந்நாட்டின் ஒற்றை ஹீலியம் உற்பத்தி ஆலையின் மீது, உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹீலியம் ஆலையைச் சுற்றியிலும், ஏராளமான ட்ரோன்கள் பறந்ததை அங்கு வசிக்கும் மக்கள் நேரில் பார்த்ததாகக் கூறப்படும் நிலையில், அப்பகுதியில் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியது உறுதியாகியுள்ளது.
பதில் தாக்குதல்
இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் விமானப் படையினர் நடத்திய பதில் தாக்குதல்களில், உக்ரைனின் 36 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
ராக்கெட், விண்வெளி மற்றும் விமான தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஹீலியம் வாயு போர் தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் ராணுவத் தளவாடங்களின் உற்பத்திக்கும் மிகவும் அவசியமான ஒன்றெனக் கூறப்படுகிறது.
இத்துடன்,ரஷ்யா பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரி ஒருவரைக் குறிவைத்து உக்ரைன் நடத்த முயன்ற பயங்கரவாதத் தாக்குதலை, அந்நாட்டு அதிகாரிகள் தகர்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக, ரஷ்யா மற்றும் உக்ரைனின் குடியுரிமைப் பெற்ற நபர் ஒருவர், வீட்டிலேயே தயாரித்த சுமார் 60 கிலோ அளவிலான வெடிகுண்டை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.