ஸ்கார்பாரோ அடுக்குமாடி குடியிருப்பில் ஈ-ஸ்கூட்டர் மின்கலன் வெடித்து தீ விபத்து!
ஸ்கார்பாரோ பகுதியில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஈ-ஸ்கூட்டரின் லித்தியம்-அயன் மின்கலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு சற்று முன்னதாக, 4205 லோரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் அமைந்துள்ள டொரொன்டோ சமூக வீடமைப்பு கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக டொரொன்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அங்கு பரவிய அடர்ந்த கரும் புகை காரணமாக கட்டடத்தின் இரண்டாவது மாடியில் எதனையும் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான நிலை காணப்பட்டதாக தீயணைப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர், தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததோடு, தீ விபத்து ஏற்பட்ட இடத்தைத் தாண்டி புகை பரவியதால், கட்டடத்திற்குள் காற்றோட்டத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் டொரொன்டோ அவசர சிகிச்சை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஈ-பைக் மின்கலன்களால் ஏற்படும் தீ வேகமாக பரவக்கூடியது, நச்சுப் புகையை உருவாக்கக்கூடியது மற்றும் இது குடியிருப்பாளர்களுக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் கடுமையான ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என டொரொன்டோ தீயணைப்புப் பிரிவுத் தலைவர் ஜிம் ஜெசோப் சமூக வலைத்தளப் பதிவொன்றில் விபத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து எச்சரித்துள்ளார்.