கோடீஸ்வரர் எலான் மஸ்கின் கனேடிய குடியுரிமை தொடர்பில் எழுந்த சர்ச்சை
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், அவரது தாய் கனடாவில் பிறந்தவர் என்பதால் கனேடிய குடியுரிமை கொண்டவர் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
இந்நிலையில், எலான் மஸ்கின் கனேடிய குடியுரிமை தொடர்பில் எழுந்த சர்ச்சை குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.
ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கனடாவுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுக்கத் துவங்கினார்.
கனடா மீது கூடுதல் வரிகள் விதிப்பதும், கனடாவை அமெரிக்காவுடன் இணப்பதாக மிரட்டுவதுமாக அவர் கொடுத்த தொல்லைகள் கனேடிய மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தின.
ட்ரம்ப் பதவிக்கு வந்ததும், அவர் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்குக்கு அரசாங்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினார். இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லத் துவங்கினர், சேர்ந்தே பேட்டிகளும் கொடுத்தனர்.
ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்துக்காக எலான் மஸ்க் பெரும் தொகை செலவிட்டதைத் தொடர்ந்து இருவருக்கும் திடீர் நட்பு ஏற்பட, இது எத்தனை நாளைக்கு என பார்க்கலாம் என உலகமே கேலிச் சிரிப்புடன் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
சரி, விடயத்துக்கு வருவோம். அதாவது, ட்ரம்ப் கனடாவுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அவரது நண்பரான எலான் மஸ்கும் ’கனடா ஒரு தனி நாடே கிடையாது’ என சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட, ஏற்கனவே ட்ரம்ப் மீது எரிச்சலில் இருந்த கனேடியர்களின் கோபம் எலான் மஸ்க் பக்கம் திரும்பியது.
எலான் மஸ்கின் கனேடிய குடியுரிமையைப் பறிக்கவேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு புகார் மனுவில் 340,000 பேர் கையெழுத்திட்டார்கள்.
சில மாகாணங்களில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத் தயாரிப்புகளை புறக்கணிப்பது என முடிவும் செய்யப்பட்டது.
ஆக, எலான் மஸ்கின் கனேடிய குடியுரிமை பறிக்கப்படுமா என்னும் கேள்வி எழுந்தது.
விடயம் என்னவென்றால், கனடாவைப் பொருத்தவரை, தேச துரோகம், மோசடி, போலியான தகவல்களைக் கொடுத்தல் போன்ற குற்றங்களைச் செய்தவர்களின் குடியுரிமை மட்டுமே பறிக்கப்படும்.
ஆகவே, எலான் மஸ்கின் கனேடிய குடியுரிமை பறிக்கப்பட வாய்ப்பில்லை என்றே தாங்கள் கருதுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.