இங்கிலாந்து கிரிக்கெட் அணி படைத்த புதிய உலக சாதனை!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரென டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ICC உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் போட்டியாக நடைபெறும் ஆட்டத்திலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, வெளிச்சம் போதாமை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது 75 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 506 ஓட்டங்களை பெற்றிருந்தது.
ஏற்கனவே, இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி ஒன்றின் இரண்டாம் நாள் அன்று ஒரே நாளில் 104 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 509 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்திருந்தது.
இந்த நிலையில், இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் அணிகளின் இன்றைய ஆட்டத்தில் போதிய வெளிச்சம் இன்மையால் 75 ஓவர்களுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டமை காரணமாகவே இலங்கை அணியின் இந்த சாதனை தக்கவைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தவிர மற்ற நான்கு துடுப்பாட்டக்காரர்களும் 100 ஓட்டங்களை கடந்தமை மற்றுமொரு சிறப்பு அம்சமாகும்.