லண்டனில் நிலத்தடி கார் பார்க்கிங்கில் வெடிவிபத்து
லண்டனில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரின் நிலத்தடி கார் பார்க்கிங்கில் வெடிவிபத்து ஏற்பட்டதில், ஒருவருக்குத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லண்டன், விம்பிள்டன் குவார்ட்டர் (Wimbledon Quarter) ஷாப்பிங் சென்டருக்கு அருகில் உள்ள குயின்ஸ் சாலையில் (Queens Road) ஒரு வெடிவிபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் கிடைத்தன.

பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த வேனுக்குள் இருந்த பொருட்கள்
நிலத்தடி கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேனுக்குள் இருந்த பொருட்கள், அந்த வேன் கார் பார்க்கிங்கின் கூரையில் மோதியதைத் தொடர்ந்து வெடித்திருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
வெடிவிபத்தின் காரணமாக வேனின் பின்புறம் முழுவதும் சிதைந்து, உலோகப் பகுதிகள் வளைந்து, ஜன்னல்கள் அனைத்தும் நொறுங்கிக் காணப்படுகின்றன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அருகில் இருந்த ஷாப்பிங் சென்டரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.
லண்டன் ஆம்புலன்ஸ் சேவை (London Ambulance Service), தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு சென்றதுடன், சம்பவத்தை அடுத்து குயின்ஸ் சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பரபரப்பான ரயில் நிலையத்துக்கு மிக அருகில் நடந்தாலும், விம்பிள்டன் அண்டர்கிரவுண்ட் நிலையம் மற்றும் ரயில் சேவைகள் தொடர்ந்து செயல்படுகின்றன.
எனினும் வெடிவிபத்துக் காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.