மகனைக் காப்பாற்ற தந்தை செய்த செயல் ; 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், மலை ஏற்றத்தின்போது தவறி வீழ்ந்த தனது மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை ஒருவர் சுமார் 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் அமைந்துள்ள சான் கேப்ரியல் மலைத்தொடரில் உள்ள மவுண்ட் பேடன் பவல் மலையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இறுதிச் சடங்குகள்
குறித்த மலையில் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி காரணமாக வழுக்கும் நிலையில் காணப்பட்ட பகுதியில் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவரது மகன் தவறி விழுந்துள்ளார். இதன்போது மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் நிலைதடுமாறி சுமார் 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கில்லர்மோ அலெஜான்ட்ரோ பட்ரெஸ் (Guillermo Alejandro Batres) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராகவும், மலையேற்ற வீரராகவும் இருந்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகள் மற்றும் குடும்பத்தின் ஏனைய நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 12,000 அமெரிக்க டொலர்களைத் திரட்டும் நிதி சேகரிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 9,350 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குளிர்காலத்தில் மவுண்ட் பேடன் பவல் மலையில் பனியும் பனிக்கட்டிகளும் அதிகளவில் படிவதால், அங்கு மலையேற்றத்தில் ஈடுபடுவது மிகவும் ஆபத்தானதாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.