கனடிய மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி
கனடிய மக்களின் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க உதவும் புதிய நடவடிக்கை தொடர்பில் பிரதமா் மார்க் கார்னி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக பொருட்கள் சேவைகள் வரி கொடுப்பனவு தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.
குளிர்கால இடைவேளைக்குப் பிறகு பாராளுமன்றம் மீண்டும் கூடியுள்ள நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கனடா மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய நன்மை என்ற புதிய திட்டத்தை கார்னி அறிமுகப்படுத்தினார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் GST தொகை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 சதவீதம் வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் சேர்த்து, வரும் ஜூன் மாதத்தில் ஒருமுறை 50 சதவீத கூடுதல் தொகை (Top-up) வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கணக்கீட்டின்படி, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம், இந்த உயர்வுகளால் இந்த ஆண்டில் அதிகபட்சமாக 1,890 டொலர் வரை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த உதவி ஆண்டுக்கு 1,100 டொலர் மட்டுமே கிடைக்கின்றது. தனிநபர் ஒருவர், இந்த ஆண்டில் 950 டொலர் பெறுவார்; இது தற்போது வழங்கப்படும் 540 டொலருடன் ஒப்பிடுகையில் கணிசமான உயர்வாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
உயர்ந்து வரும் மளிகைப் பொருட்கள் விலை, அத்தியாவசியச் செலவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் அழுத்தத்தை குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.