இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு வந்த முதல் விமானம்; தாயகம் திரும்பிய 212 பேர்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நீடித்துவரும் நிலையில் ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இந்தியாவின் தலைநகருக்கு வந்த முதல் விமானத்தில் 212 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு ஜெருசேலத்தில் இருந்து ஏஐ 1140 விமானம் இந்தியா புறப்பட்டது. இதில் இந்தியா திரும்ப விரும்பிய மக்கள் அழைத்து வரப்பட்டனர்.
இருதரப்புக்கும் இடையில் மோதல்
இந்தியாதிரும்பியவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளி குழுக்கள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலில் , நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக போர் தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்தது.
காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழியாக கடுமையான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதில் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமானதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இருதரப்புக்கும் இடையில் மோதல் வலுத்து வருவதால், இஸ்ரேலில் உள்ள 18 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நேற்று இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் 212 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.
மேலும் தொடர்ந்து இஸ்ரேலில் இருந்து மக்கள் இந்த திட்டத்தின் மூலம் இந்தியா திரும்புவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.