பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி!
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பாரிய பணவீக்கத்தால் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளதுடன், லட்சக்கணக்கான மக்கள் ஒரு நாள் முழுவதும் உணவை தவிர்த்து தங்களது நாளை முடித்துக் கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஃபுட் ஃபவுண்டேஷன் சாரிட்டி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களாக வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் நிலைமை மோசமாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா-யுக்ரைன் போர், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற காரணிகளால் அங்கு விநியோகச் சங்கிலி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறைந்த வருமானம் கொண்ட 5 குடும்பங்களில் ஒன்று உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் பிரித்தானியாவிலுள்ள 18 சதவீத குடும்பங்கள் கடந்த செப்டெம்பர் மாதத்தில் தங்கள் உணவு நுகர்வைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், லட்சக்கணக்கான மக்கள் ஒரு நாள் முழுவதும் உணவு தவிர்த்து தங்களது நாளை முடித்துக் கொண்டுள்ளனர். 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து பிரித்தானியா அனுபவித்த மோசமான உணவுப் பாதுகாப்பின்மை இதுவாகும்.
இந்த நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் குழந்தைகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இவ்வாறு பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்குவதற்கான கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஃபுட் ஃபவுண்டேஷன் சாரிட்டி அமைப்பின் தலைமை நிர்வாகி நவோமி டங்கன்(Naomi Duncan) கூறும்போது, “ பிரித்தானியாவில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. இந்த நிலைமை தற்போது மேலும் மோசமடைந்து வருகிறது.
இதுபோன்று பாதிக்கப்படும் அனைத்து குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பாடசாலைகளில் இலவச உணவு வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.