பாலியில் ஹிந்து பாரம்பரியத்தை அவமதித்த வெளிநாட்டவர் கைது ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான நியேபி (Nyepi) தினத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்ட சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த லூசியன் ஆன்ட்ரின் என்பவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலி தீவில் பெரும்பான்மையான மக்கள் ஹிந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

அங்கு ஆண்டுதோறும் நியேபி எனப்படும் அமைதித் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருப்பதுடன், பொழுதுபோக்கு நடவடிக்கைகளைத் தவிர்த்து அமைதியாக இருப்பது பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த விதிமுறைகள் அங்கு தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும். இந்த ஆண்டுக்கான நியேபி பண்டிகை மார்ச் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், பண்டிகை காலத்தில் பாலிக்கு சுற்றுலா சென்றிருந்த லூசியன் ஆன்ட்ரின், அப்பண்டிகையின் பாரம்பரியத்தை அவமதிக்கும் வகையில் காணொளி ஒன்றை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து லூசியன் ஆன்ட்ரின் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவர் பாலி தீவுக்கு வந்தபோது, நியேபி பண்டிகை தொடர்பான விதிமுறைகள் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் அவருக்கு அறிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு டென்பசார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பண்டிகையின் பாரம்பரியம் குறித்து தனக்கு முழுமையாகத் தெரியாது என்றும், உணவு கிடைக்காததால் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் லூசியன் ஆன்ட்ரின் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது செயலுக்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். எனினும், வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அதேவேளை, அவர் ஏற்கனவே சிறையில் கழித்த ஐந்து மாத காலத்தை தண்டனைக் காலத்தில் கழித்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.