முல்லைத்தீவில் சிறுமி மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில் வசித்த சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மீட்பு சம்பவம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, உடையார்கட்டு வடக்கு – மூங்கிலாறு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (19-12-2021) ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட குறித்த சந்தேக நபர் நீண்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட, பெண்ணின் உறவினரே இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, நீண்ட காலமாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையும் அதன் பலனாக அவர் கர்ப்பிணியாக இருந்துள்ளதாகவும் வைத்திய அறிக்கைகள் ஊடாக தெளிவாவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிறுமி, 2 மாத கர்ப்பிணி என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கர்ப்பத்தை சட்ட விரோதமாக அகற்ற முற்பட்டபோது, பிறப்புறுப்பில் ஏற்பட்ட வெட்டுக்காயங்கள் கரணமாக அதிக இரத்த போக்கு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ சுட்டிக்காட்டினார்.
முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவாவினால் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.