தந்தையின் பணத்தை அள்ளி காருக்கு வெளியே சாலையில் வீசிய சிறுமி... பின்னர் நடந்த சம்பவம்
ஜேர்மனியில் தந்தையுடன் காரில் சென்ற 2 வயது சிறுமி தமது தந்தையின் பணப்பையில் இருந்து கத்தையான தாள்களை வெளியே சாலையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிறன்று நடந்த இச்சம்பவத்தால் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. குறித்த 2 வயது சிறுமி தந்தையுடன் காரில் சென்றுகொண்டிருந்த போது, பணப்பையை எடுத்து விளையாடியுள்ளார். தொடர்ந்து அந்த பணப்பையை காருக்கு வெளியே சாலையில் வீசியுள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த அந்த தந்தை தமது வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையில் சிதறிக்கிடந்த பணத்தாள்களை சேகரிக்க சென்றுள்ளார். இதனிடையே, வரிசையாக வந்த வாகனங்கள் இந்த களேபரத்தில் சிக்கி ஒன்றோடொன்று மோதியுள்ளது.
பெண் சாரதி ஒருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 15,000 யூரோ அளவுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனாலும், அந்த சிறுமியின் தந்தையால் தமது பணத்தாள்கள் மொத்தமும் மீட்கப்பட்டது என்றே கூறப்படுகிறது.