வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு உதவும் அரசாங்கம்
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிக்க உதவும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கான ஒரு குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பின்படி, இலங்கையில் வசிக்கும் குடிமக்களுக்கும், தேர்தல் சட்டத்தின்படி வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தவர்களுக்கும் மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளது.
தற்போதைய தேர்தல் சட்டத்தின்படி, வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்கள் வாக்களிக்க அனுமதிக்கும் எந்தவொரு சட்டமும் இயற்றப்படவில்லை.
திருத்தப்படவுள்ள சட்டங்கள்
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல ஆசிய நாடுகள், வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் குடிமக்கள் வாக்களிக்க உதவும் வகையில் சட்டங்களை வகுத்துள்ளன.
இவ்வாறிருக்க, வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் குடிமக்கள் வாக்களிக்க உதவும் வகையில் இலங்கையும் சட்டங்களை திருத்தவுள்ளது.
இதற்கமைய, சட்டங்களைத் திருத்துவதற்கும் புதிய சட்டங்களை உருவாக்குவதற்கும் தொடர்புடைய விவரங்களை ஆய்வு செய்வதற்கும் ஒரு குழு நியமிக்கப்பட உள்ளது.
இந்தக் குழுவில், தேர்தல் ஆணையம், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம், பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளாட்சி அமைச்சகம், பிற அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.