தாய்லாந்து - கம்போடியா எல்லையில் பதட்டம் ; வெடித்தது ஆயுத மோதல்
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இன்று (24) அதிகாலை, மோதல்கள் வெடித்ததாக இரு நாடுகளின் இராணுவங்களும் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்துக்குப் பிறகு ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில், முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பதைக் குறித்து இரு தரப்பும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ வீரர்கள் காயம்
தாக்குதலில் தாய்லாந்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாகவும், இரண்டு தாய்லாந்து இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதல், சர்ச்சைக்குரிய டா மோன் தாம் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதியில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்து இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், கம்போடியா ஒரு கண்காணிப்பு வானூர்தியைப் பயன்படுத்திய பின்னர், கனரக ஆயுதங்களுடன் அப்பகுதிக்கு படைகளை அனுப்பி துப்பாக்கிச் சூடு நடத்தியது என தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக, கம்போடிய தற்காப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர், “தாய்லாந்து படைகளின் தூண்டுதலற்ற அத்துமீறலை எதிர்த்து, தற்காப்புக்காக மட்டுமே பதிலடி கொடுக்கப்பட்டது” என கூறினார்.
இந்த பதற்றமான சூழ்நிலையை மேலும் தீவிரமாக்கும் வகையில், நேற்று (23) தாய்லாந்து, பெங்கொக்கிலுள்ள கம்போடிய தூதுவரை வெளியேற்றுவதாக அறிவித்தது. இதற்கு முந்தைய வாரம், சர்ச்சைக்குரிய பகுதியில் தாய்லாந்து இராணுவ வீரர் ஒருவரும் கண்ணிவெடியால் ஒரு காலை இழந்த சம்பவமும் நடைபெற்றது.
தற்போதைய நிலைமை தொடர்பாக சர்வதேச சமூகத்தில் கவலை அதிகரித்து வரும் நிலையில், அமைதியை பின்பற்றி கலந்துரையாடல் மூலம் தீர்வு காண வேண்டிய அவசியம் மேலும் வலியுறுத்தப்படுகிறது.