ஹைதி நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 1419 ஆக உயர்வு
ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,419-ஆக அதிகரித்துள்ளது,காயமடைந்தவா்களின் எண்ணிக்கையும் 6 ஆயிரமாக அதிகரித்தது.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,419-ஆக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. மேலும், காயமடைந்தவா்களின் எண்ணிக்கையையும் 6 ஆயிரமாக அந்த அமைப்பு உயா்த்தியுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, கொரோனா பரவல், வறுமை, அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலையால் ஏற்பட்டுள்ள பதற்றம் போன்றவற்றில் சிக்கித் திணறும் ஹைட்டியில், தற்போது இந்த நிலநடுக்கம் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலநடுக்கம், 2021-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் மோசமானது என்று கூறப்படுகிறது.