டிரம்பின் அடுத்த அதிரடி திட்டத்தை ஏற்ற ஹமாஸ்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி ஒப்பந்தத்தில், ஒரு சிலவற்றை மட்டும் ஏற்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
மீதமுள்ளவை குறித்து பேச்சு நடத்தலாம் என்று கூறியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. அவகாசம் இப்போரை முடிவுக்கு கொண்டு வர, உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 20 அம்சங்கள் உள்ள அமைதி திட்டத்தை முன்மொழிந்திருந்தார்.
இதற்கு இஸ்ரேல் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அமைதி ஒப்பந்தம் குறித்து பதிலளிக்க ஹமாஸ் அமைப்புக்கு, இன்று மாலை 6:00 மணி வரை அவகாசம் அளிப்பதாக காலக்கெடு விதித்திருந்தார்.
இதையடுத்து, அமைதி திட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் நேற்று தெரிவித்துள்ளது.
மேலும், சில முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
அமைதி திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உயிருடன் மற்றும் இறந்த பிணைக் கைதிகள் அனைவரையும் ஒப்படைப்பதற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
உடனடியாக, போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், இஸ்ரேல் படைகள் காசாவில் இருந்து முழுதுமாக வாபஸ் பெறுவதற்கும் ஆதரவளித்துள்ளது.
காசாவுக்கு உடனடி மனிதாபிமான உதவி மற்றும் மறு சீரமைப்பு முயற்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், அமைதி திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களை கைவிட வேண்டும் என்பதை ஏற்கவில்லை.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரும் வரை ஆயுதங்களை கைவிடமாட்டோம் என, ஹமாஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.