மேலும் 6 பேரை இன்று விடுதலை செய்யும் ஹமாஸ்
இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று (22) விடுதலை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.
ஓராண்டிற்கும் மேலாக நீடிக்கும் போர்
காசாவில் 73 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாகவும் இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்தது. அதேவேளை, தங்கள் பிடியில் உள்ள பணய கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் நேற்று ஒப்படைத்தது.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்கிறது. பணய கைதிகளில் 4 பேர் 2023 அக்டோபர் 7ம் தேதி கடத்தப்பட்டவர்கள் என்றும், எஞ்சிய 2 பேர் 2014, 2015ம் ஆண்டுகளில் காசாவுக்குள் நுழைந்தவர்கள் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஹமாஸ் இன்று விடுவிக்கும் 6 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 602 பேரை இஸ்ரேல் விடுதலை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.