கென்யாவில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
கென்யாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை ( 06.03.2026 ) முதல் பெய்து வரும் தொடர் மழையினால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் நைரோபியில் மாத்திரம் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளது
வெள்ளநீரில் வீடுகள் மூழ்கியதுடன், பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மேலும், ஆற்றுப்பகுதிகள் நிரம்பி வழிவதாலும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளதாலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த இயற்கை அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்குவதற்காக மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் இறுதிச் சடங்கு செலவுகளை அரசாங்கமே ஏற்கும் என பொதுச் சேவை மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான அமைச்சர் ஜெஃப்ரி ருக்கு (Geoffrey Ruku) தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.