நயாகராவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
நயாகரா ஃபால்ஸ் பகுதியில் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை நயாகரா பிராந்திய காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.
காவல்துறையினரின் முதற்கட்ட தகவலின்படி, வியாழக்கிழமை இரவு சுமார் 8:50 மணியளவில் நயாகரா ஃபால்ஸ் நகரின் தோரோல்ட் ஸ்டோன் சாலை மற்றும் டார்செஸ்டர் சாலை சந்திப்புக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்புக்கு வந்த இரண்டு சந்தேக நபர்கள், அங்கிருந்த ஒரு நபரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், காவல்துறையினர் அவர்களின் அடையாள விபரங்களை வெளியிட்டுள்ளனர்:
முதல் சந்தேக நபர் (ஆண்): 25 முதல் 35 வயதிற்குட்பட்டவர், சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம், ஒல்லியான உடல்வாகு மற்றும் கருத்த நிறம் கொண்டவர்.
இவர் டி-சர்ட், அடர் நிறப் பேண்ட், காலணிகள், கூலிங் கிளாஸ் மற்றும் தலையில் சிவப்பு நிற துண்டு (Red bandana) அணிந்திருந்தார்.
இரண்டாம் சந்தேக நபர் (பெண்): 18 முதல் 25 வயதிற்குட்பட்டவர், அடர் பழுப்பு நிற முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர்.
இவர் தளர்வான நீல நிற ஸ்வெட்பேண்ட், சாம்பல் நிற ஹூடி மற்றும் வெள்ளை நிற காலணிகளை அணிந்திருந்தார்.
இவர்கள் இருவரும் சம்பவ இடத்திற்கு அருகில் புத்தம் புதிய மாடல் 'வெள்ளை நிற நிசான் எஸ்.யூ.வி' (White Nissan SUV) காரை நிறுத்தியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
இக்கொலை வழக்கு குறித்துப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகக் கருதப்பட்டாலும், ஆயுதங்களுடன் இருக்கும் சந்தேக நபர்கள் இன்னும் பிடிபடாததால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று காவல்துறை எச்சரித்துள்ளது.