தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து செப்புக் கம்பிகளை திருடியவர் கைது
கனடாவின், நியூ பிரன்சுவிக் (N.B.) மாகாணத்தின் சீலீஸ் கோவ் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து செப்புக் கம்பிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் 38 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீலீஸ் கோவ் சாலையில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்தில் செப்புக் கம்பிகள் திருடப்பட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கனடிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த குறிப்பிட்ட கோபுரம் சமீபகாலமாக பலமுறை திருடர்களின் இலக்காக மாறியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் ரிமோட் மூலம் இயக்கப்படும் விமான அமைப்புகள் (RPAS) பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அப்பகுதியை வான்வழியாகக் கண்காணித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தார்.
இந்தத் தேடலின் போது, அங்குள்ள ஒரு பொழுதுபோக்கு வாகனத்திற்கு அருகில் பெருமளவிலான செப்புக் கம்பிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது ட்ரோன் கேமராவில் கண்டறியப்பட்டது. ட்ரோன் ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு கோடி பாபினோ (Cody Babineau) என்ற 38 வயது நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இந்த நபர் ஏற்கனவே ஒரு வழக்கில் வீட்டுக்காவலில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, இந்த விசாரணை தொடர்பாக அங்குள்ள ஒரு குடியிருப்பில் சோதனை நடத்துவதற்கான வாரண்ட்டைப் பெற்ற காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இச்சோதனையில், சுமார் 16,000 டொலர் மதிப்புள்ள 1,000 மீட்டர் நீளமுள்ள செப்புக் கம்பிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.