பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்றப்படாது
உலகின் முதனிலை வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹொண்டா நிறுவனமானது, தங்களது கனடா உற்பத்தி மையத்திலிருந்து வாகனங்களை அமெரிக்காவிற்கு மாற்றுவதற்கான எந்தத் தீர்மானமும் தற்போது இல்லை என அறிவித்துள்ளது.
ஹொண்டா தனது கனடா தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் CR-V மற்றும் சிவிக் மாடல்களை அமெரிக்காவிலேயே அதிகளவில் உற்பத்தி செய்து, அந்நாட்டு விற்பனைக்கு 90% வரை உள்ளூர் உற்பத்தி வாகனங்களை வழங்க திட்டமிடுவதாக ஜப்பானின் நிக்கேய் நிதிச் செய்தித்தாள் முதலில் வெளியிட்டிருந்தது.
அமெரிக்காவில் தற்போது நடைமுறையில் உள்ள புதிய வரி விதிப்புகளின் காரணமாக, ஹொண்டா ஆண்டுக்கு சுமார் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இது கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் 300,000 வாகனங்களையும், மொத்தமாக 500,000 வாகனங்களையும் உள்ளடக்கியது.
ஏப்ரல் 3ஆம் திகதிக்கு முன் இவை வரிவிலக்காக இருந்தன. எனினும், ஹொண்டா இதற்குப் பதிலளிக்கையில், தற்போதைய உற்பத்தி அளவுகளை எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பராமரிக்க உள்ளது என நிறுவனத்தின் பேச்சாளர் கென் சியு உறுதிப்படுத்தியுள்ளார்.
"Alliston, Ontarioவில் உள்ள எங்கள் தொழிற்சாலை முழு உற்பத்தி திறனில் தொடரும். தற்போதைக்கு எவ்வித மாற்றத்தையும் திட்டமிடவில்லை," என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை மத்திய மற்றும் மாநில அரசுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த வருடம் ஹொண்டா, Alliston தொழிற்சாலையில் 375,000 வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது, இங்கு சுமார் 4,200 பேர் பணியாற்றி வருகின்றனர்.