அவர்கள் கொள்ளையர்கள்... கனடாவில் திரண்ட நூற்றுக்கணக்கான இலங்கையர்கள்
கனடாவின் மிசிசாகா பகுதியில் நூற்றுக்கணக்கான இலங்கை கனடியர்கள் ஒன்று திரண்டு இலங்கை ஜனாதிபதி ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மிசிசாகாவின் Celebration சதுக்கத்தில் ஒன்று திரண்ட இலங்கை மக்கள் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மார்ச் மாதம் முதல் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கை ஜனாதிபதியின் மாளிகை, அலுவலகம் மற்றும் பிரதமரின் இல்லம் ஆகியவற்றில் புகுந்துள்ளனர். இந்த நிலையில் மிசிசாகா ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜூலியன் தேவிகா ஆண்டனி தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சக இலங்கையர்கள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டையே அவர்கள் கொள்ளையிட்டார்கள், மக்களை பட்டினிக்கு தள்ளினார்கள், மருத்துவ வசதி போதுமானதாக இல்லை, கல்விக்கும் வழியில்லை, அதனாலையே அவர்களை பதவி விலக கோருகிறோம் என தெரிவித்துள்ளார் ஜூலியன் தேவிகா ஆண்டனி.
ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல்கள் தான் தற்போதைய இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனவும் மிசிசாகா ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.