ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடுநிலை வகித்த இந்தியா
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தில் இந்தியா பங்கேற்கவில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யா கொண்டு வந்த வரைவு தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
இதன் மூலம் இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
முன்னதாக, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஆதரிக்குமாறு ஐ.நா உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்தது.
அந்த தீர்மானத்தின் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில் உக்ரைனின் வளர்ந்து வரும் மனிதாபிமான தேவைகளை ஒப்புக்கொண்ட ரஷ்யா தீர்மானத்தில், அதில் உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பை பற்றி குறிப்பிடாமல் மறைத்து தீர்மானம் உருவாகியுள்ளது.
இந்த தீர்மானத்தை நிறைவேற்ற 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், ரஷ்யாவிற்கு குறைந்தபட்சம் ஒன்பது உறுப்பினர்களின் வாக்குகள் தேவைப்பட்டது.
ஆனால் 13 கவுன்சில் உறுப்பினர்கள் வாக்களிக்காமல், ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான சீனாவிடம் இருந்து மட்டுமே ஆதரவு கிடைத்தது.
ரஷ்யா பரவலான ஆதரவைப் பெறத் தவறியதையடுத்து உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. உக்ரைனில் ரஷ்யாவால் மட்டுமே உருவாக்கப்பட்ட மனிதாபிமான நெருக்கடியை தீர்க்க, மற்ற நாடுகளை ரஷ்யா தைரியமாக ஆதரவு கேட்கிறது.
உக்ரைனில் உண்மையிலேயே மனிதாபிமான நிலைமை மோசமடைவதை குறித்து ரஷ்யா அக்கறை கொண்டிருப்பின், குழந்தைகள் மீது அந்நாட்டு படைகள் குண்டுவீசுவதை நிறுத்த வேண்டும். ஆனால் ரஷ்யா அதை செய்யவில்லை என்று பிரிட்டன் தெரிவித்தது.
உக்ரைனின் மனிதாபிமான சூழ்நிலையில் ஐ.நா தனது பங்கை வகிக்க வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டது. ரஷ்யாவின் தீர்மானத்தில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக பல நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில், உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதாக வெளியாகி வருபவை போலியான செய்திகள் என்று ரஷ்ய தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.