இந்தியாவில் தொடர்ந்து முதலிடம் பிடித்த பணக்கார பெண்! யார் தெரியுமா!
இந்தியாவின் பெரும் பணக்கார பெண்களில், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார்(Roshni Nadar) தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
கோட்டக் வங்கியும், ஹூருன் நிறுவனமும் இணைந்து, 2021ம் ஆண்டின் இந்தியாவின், 100 பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ஷிவ் நாடார் துவக்கிய எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர், ரோஷினி நாடார்(Roshni Nadar), இந்தியாவின் பெரும் பணக்கார பெண்களில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு, 54 சதவீதம் உயர்ந்து, 84 ஆயிரத்து 330 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இரண்டாவது பணக்கார பெண் என்ற சிறப்பை, நைக்கா அழகு சாதன நிறுவனத்தின் தலைவர் பல்குனி நாயர் பிடித்துள்ளார்.
வங்கிப் பணியை உதறி, நைக்காவை துவக்கிய பல்குனி நாயரின் சொத்து மதிப்பு, ஓராண்டில், 963 சதவீதம் உயர்ந்து, 57 ஆயிரத்து, 520 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
உயிரி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மசூம்தார் ஷாவின் சொத்து மதிப்பு, 21 சதவீதம் குறைந்து, 29ஆயிரத்து 30 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
எனினும் இவர், மூன்றாவது இடத்தில் உள்ளார்.இந்தியாவின், 100 பணக்கார பெண்களின் சொத்து மதிப்பு, ஓராண்டில், 53 சதவீதம் உயர்ந்து, 2.73 லட்சம் கோடியில் இருந்து, 4.16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பணக்கார பெண்கள் பட்டியலில், அப்போலோ ஹாஸ்பிடல் குழுமத்தில், அதிகபட்சமாக நான்கு பெண்கள் இடம் பிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மெட்ரோ ஷூஸ், தேவி சீ புட்ஸ் நிறுவனங்களில் தலா இரு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
மிக இளம் பணக்கார பெண்களில், போபாலை சேர்ந்த ஜெட்செட்கோ நிறுவனரான, கனிகா தெக்ரிவால், 33 இடம் பிடித்துள்ளார். இவருக்கு, 420 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன.
நிறுவன நிர்வாகிகளில், பெப்சிகோ முன்னாள் தலைவர் இந்திரா நுாயி, 5,040 கோடி ரூபாய், எச்.டி.எப்.சி., வங்கியின் ரேணு சுத் கர்நாட், 870 கோடி ரூபாய் மற்றம் கோடக் மஹிந்திரா வங்கியின் சாந்தி ஏகாம்பரம், 320 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பட்டியலில் இடம் பிடித்துள்ளர்கள் என தெரியவந்துள்ளது.