ரஷியாவில் 19 நாட்களுக்குப்பின் இந்திய மருத்துவ மாணவன் சடலமாக மீட்பு
ரஷியாவில் மாயமான இந்திய மருத்துவ மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் அஜித் சிங் சவுதிரி (வயது 22). இவர் ரஷியாவின் பஷ்கொஷ்டான் மாகாணம் உபா நகரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். கல்வி படித்து வந்தார்.

19 நாட்களுக்குப்பின் சடலமாக மீட்பு
இந்நிலையில், கடந்த 19ம் மாதம் தேதி காலை 11 மணிக்கு உணவு பொருட்கள், பால் வாங்கி வருவதாக சக மாணவர்களிடம் கூறிவிட்டு பல்கலைக்கழக விடுதியில் இருந்து அஜித் சிங் வெளியே சென்றுள்ளார்.
ஆனால், வெகுநேரமாகியும் அஜித் சிங் விடுதி திரும்பாததால் சந்தேகமடைந்த சக மாணவர்கள் இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் உபா நகரில் உள்ள வெள்ளை ஆறு (ஒயிட் ரிவர்) அருகே அஜித் சிங்கின் செல்போன், ஆடைகள் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், மாயமான 19 நாட்களுக்குப்பின் இந்திய மாணவன் அஜித் சிங் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளை ஆற்றில் அமைந்துள்ள அணையில் அஜித் சிங்கின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அஜித் சிங்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதேவேளை, அஜித் சிங் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து ரஷிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.