இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள் ; வெள்ளை மாளிகையின் முக்கியஸ்தர் கருத்து
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார்.
இந்நிலையில் இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு நேற்று முதல் 50 சதவீதமாக உயர்ந்து நேற்று முதல் அமலுக்கு வந்தது.
மோடியின் போர்
இந்த நிலையில், உக்ரைனில் நடைபெறும் மோதலை 'மோடியின் போர்' என்றும் இந்தியர்கள் திமிர்பிடித்தவர்கள் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையின் ஆலோசகர், பீட்டர் நவேரா கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பீட்டர் நவேரா, உக்ரைனில் நடைபெறும் மோதல் 'மோடியின் போர்'. இந்தியா குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை வாங்குவது அந்நாட்டின் ஆக்கிரமிப்பை தூண்டிவிடுவதோடு, அமெரிக்க வரி செலுத்துவோர் மீது சுமையை அதிகரித்துள்ளது.
எங்களது வலியுறுத்தலை ஏற்று ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியில் 25 சதவிகிதத்தை குறைப்போம். இந்தியர்கள் இந்த விவகாரத்தில் மிகவும் திமிர்பிடித்தவர்களாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது.
இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் பாதிப்பைச் சந்திக்கிறார்கள். மோடியின் போரால் அமெரிக்கா வணிகம், நுகர்வோர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளில் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்திக்கிறது என்று கூறியுள்ளார்.