பிரான்ஸில் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான தகவல்!
பிரான்ஸில் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை புதுப்பிக்க அல்லது புதிதாக பெறுவதற்கு முயற்சிக்கும் மக்களுக்கு புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் இதுவரையில் அடையாள அட்டை மற்றும் கடவுசீட்டை பெறுவதற்கு விண்ணப்பித்துவிட்டு அதிகாரிகளை சந்திக்க குறைந்தபட்சம் 50 நாட்களேனும் காத்திருக்க வேண்டும்.
சிலர் இந்த நடவடிக்கைக்காக 6 மாதங்களாக காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. 6 மாதங்கள் காத்திருந்தும் அதனை பெற முடியாத நிலைமையே காணப்படுகின்றது.
இதை நிவர்த்தி செய்யும் வகையில், நகர மண்டபத்தில் திகதிகளை ஒதுக்கிக் கொள்வதற்கு வசதியாக ஒரு புதிய சேவை, அரசாங்கத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த அடையாள அட்டை அல்லது கடவுசீட்டு பெறுவதற்கான திகதி மற்றும் அதிகாரிகளை சந்திப்பதற்கான திகதிகளை பெறுவதற்கு உள்ள பயனர்களின் சிரமத்தை சமாளிக்க, பாதுகாப்பான ஆவணங்களுக்கான தேசிய நிறுவனம் ஒரு தேடுபொறியை (search engine) ஆரம்பித்து வைத்துள்ளது.
அடுத்த 3 மாதங்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது மக்களின் நேரத்தையும் மீதப்படுத்துகின்றது. தேடுபொறியை பார்வையிடுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதனை பார்வையிடுவதன் மூலம் மக்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். குறித்த தளத்திற்குச் சென்று, அதிகபட்ச தேடல் தூரம் , சந்திப்புக்கான காரணம், கோரிக்கையை முன்வைக்கும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் அதன் இருப்பிடம் ஆகியவற்றைக் குறிக்கும் ஒன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும்.
அந்த தளம் உரிய நபரை சுற்றியுள்ள இடங்களை வழங்குகிறது. அதற்கமைய, அதிகாரிகளை சந்திப்பதற்கான விண்ணப்பத்தை ஒன்லைனிலேயே செய்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்காக மக்கள் இனிமேல் அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.