அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம் ; புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாக ஈரான் குற்றச்சாட்டு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் உயர்மட்டத் தலைவருடன் தொடர்புடைய ஒருவருக்கு எதிராக அமெரிக்க திறைசேரி திணைக்களம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பது, இரு நாடுகளும் ஜூன் மாதத்தில் எட்டிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறும் செயல் என அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பும் தற்போதைய நிலையைப் பேணுவதுடன், புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்காமல் இருக்க இணக்கம் தெரிவித்திருந்ததாகவும், தற்போதைய அமெரிக்க நடவடிக்கை அந்த உறுதிமொழிக்கு முரணானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்குப் பதிலடியாகவே புதிய தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு ஈரானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரான் தொடர்புடைய இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நலன்கள் மற்றும் தளங்களை குறிவைத்து ஈரான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், ஓமான் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தத்துடன் பதற்றத்தைத் தணிக்கும் இராஜதந்திர முயற்சிகளும் தொடர்கின்றன.