ஈரானின் முழு நாகரிகம் அழியும் ; ட்ரம்ப் விடுத்துள்ள புதிய சர்ச்சை
ஈரான் உடனான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அந்த நாட்டின் 'முழு நாகரிகமும்' இன்று இரவே அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஒருவரிடமிருந்து இத்தகைய கடும் தொனியிலான அச்சுறுத்தல் விடுக்கப்படுவது இதுவே முதல் முறை என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ட்ரம்ப்பின் இந்த கருத்தானது ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிப்பதாகக் கருதப்படும் 'இனப்படுகொலை' (Genocide) அச்சுறுத்தலாக அமையக்கூடும் என அமெரிக்க வெளியுறவு திணைக்களத்தின் முன்னாள் சட்ட ஆலோசகர் பிரையன் ஃபினுக்கேன் கவலை வெளியிட்டுள்ளார்.
1948ஆம் ஆண்டு இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஒரு கையெழுத்திட்ட நாடாக உள்ள நிலையில், இத்தகைய பேச்சுக்கள் சர்வதேச விதிகளுக்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இது குறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்க வெளியுறவு திணைக்களம், “ஜனாதிபதியின் கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், கடந்த 47 ஆண்டுகளாகத் தொடரும் ஊழல் மற்றும் மரணங்களுக்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும் என்பதையே அவர் குறிப்பிட்டார்” என தெரிவித்துள்ளது.
ஈரானை ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ட்ரம்ப் கையாளும் ஒரு தந்திரமான பேச்சாக இது கருதப்பட்டாலும், தூதரக முயற்சிகளைத் தவிர்த்து இராணுவ பலத்தைப் பயன்படுத்த அவர் முனைவது போருக்கான உண்மையான அச்சத்தை உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது.
"ஒரு முழு நாகரிகமும் மீண்டும் மீள முடியாதபடி இன்று இரவு அழியும்; இது நடக்காது என நம்புகிறேன், ஆனால் அநேகமாக நடக்கலாம்" என ட்ரம்ப் பதிவிட்டுள்ளமை, சர்வதேச போர்க்கால விதிமுறைகள் சிதைக்கப்படுவதற்கான ஒரு முன்னெச்சரிக்கையாகும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.