கனடாவில் சிகிச்சையின் போது உயிரிழந்த நோயாளி எடுக்கப்பட்ட நடவடிக்கை
நோயாளி ஒருவரின் மரணம் மற்றும் மருத்துவ விதிமீறல் புகார்களைத் தொடர்ந்து, ஒண்டாரியோவைச் சேர்ந்த பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்டீபன் ஜோசப் கொனாசிவிச் (Stefan Joseph Konasiewicz) என்பவரின் மருத்துவ உரிமத்தை ஆறு மாதங்களுக்கு இடை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
டொராண்டோ, ஹாமில்டன் மற்றும் நியூமார்க்கெட் ஆகிய இடங்களில் கிளினிக்குகளை நடத்தி வரும் டாக்டர் கொனாசிவிச், வலி நிவாரண சிகிச்சையில் (Pain Medicine) நிபுணத்துவம் பெற்றவர்.
2022 ஆம் ஆண்டிலேயே இவரது மருத்துவத் தரம் குறித்து எழுந்த புகார்களை அடுத்து, ஓராண்டு காலம் இவர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டார்.

ஒண்டாரியோ மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரி நடத்திய ஆய்வில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டன: பரிசோதிக்கப்பட்ட 15 நோயாளி கோப்புகளில் 12-இல் முறையான மருத்துவத் தரம் பின்பற்றப்படவில்லை.
சிகிச்சை பலனளிக்காத நிலையிலும், வாராந்திர இடைவெளியில் தொடர்ந்து ஊசிகளைச் செலுத்தியுள்ளார்.
தேவையற்ற நோய்களுக்கும் 'சையாடிக் நரம்பு பிளாக்' (Sciatic nerve blocks) போன்ற ஊசிகளைப் பயன்படுத்தியதன் மூலம் அவரிடம் போதிய திறன் மற்றும் அறிவுத்திறன் குறைபாடு இருப்பது உறுதியானது.
2015 முதல் கழுத்து மற்றும் தோள்பட்டை வலிக்காக இவரிடம் சிகிச்சை பெற்று வந்த 70 வயது நோயாளி ஒருவருக்கு, தண்டுவட நரம்பு ஊசி (Nerve block) செலுத்திய சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஊசி செலுத்தும்போது ஊசியின் முனையைத் தண்டுவடக் கால்வாயை (Spinal canal) நோக்கிச் செலுத்தியுள்ளார்.
எக்ஸ்-ரே போன்ற இமேஜிங் கருவிகளைச் சரியாகப் பயன்படுத்தாமல், தவறான இடத்தில் ஊசியைச் செலுத்தியதால், மயக்க மருந்து நேரடியாகத் தண்டுவடத்திற்குள் சென்று மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த மரணத்திற்குப் பிறகு, அத்தகைய ஊசிகளைச் செலுத்த அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
எனினும், 2025 மே மாதம் ஒரு நோயாளி அளித்த புகாரில், டாக்டர் கொனாசிவிச் இன்னும் அதே போன்ற ஊசிகளைச் செலுத்தி வருவது அம்பலமானது.
இந்த விதிமீறலே தற்போது அவருக்கு 6 மாத காலக் கடுமையான தடையைப் பெற்றுத் தந்துள்ளது.