அமெரிக்க இராணுவத் தளங்கள் குறித்து ஈரானின் புதிய உச்ச தலைவர் அதிரடி எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ இருப்பு மற்றும் வளைகுடா நாடுகளின் பங்கை கடுமையாக விமர்சித்துள்ள ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி (Mojtaba Khamenei), இனி வளைகுடா நாடுகள் அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு “ஒரு கேடயமாக” செயல்படாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு இனி “பாதுகாப்பான புகலிடம்” எதுவும் இருக்காது என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ள நிலையில், குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி, வளைகுடா பாதுகாப்பு மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்கள் தொடர்பான விவகாரங்கள் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த பின்னணியில், மொஜ்தாபா கமேனி வெளியிட்டுள்ள இந்தக் கருத்து, வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் இராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளித்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
மேலும், அமெரிக்காவின் இராணுவ ஆதிக்கம் மத்திய கிழக்கில் நிலைத்திருக்க முடியாது என்றும், பிராந்திய நாடுகள் வெளிநாட்டு தலையீடுகளிலிருந்து விடுபட வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஈரான்–அமெரிக்க உறவுகள் தொடர்பான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான கருத்துக்கள் பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.