பதவியேற்ற 11 நாட்களில் ஈரான் துணை அதிபர் ராஜினாமா
ஈரான் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜாவத் ஜரீப் திடீரென ராஜினாமா செய்ததால் ஈரான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானில் கடந்த மே மாதம் அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த பின்னர் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மசூத் பெசெஷ்கியான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியான முகமது ஜாவத் ஜரீப் (வயது 64) நாட்டின் மூலோபாய விவகாரங்களுக்கான துணை அதிபராக கடந்த இரண்டாம் திகதி நியமிக்கப்பட்டார்.
அமைச்சரவை அமைப்பதில் ஏற்பட்ட அதிருப்தி
இந்தநிலையில் நாட்டின் புதிய அமைச்சரவை பட்டியலை அதிபர் மசூத் பெசெஷ்கியான் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) முன்மொழிந்தார்.
இதில் ஒரு பெண் உள்பட 19 எம்.பி.க்கள் இருந்தனர். இந்த பட்டியல் முன்மொழியப்பட்ட சில மணி நேரங்களில் துணை அதிபர் முகமது ஜாவத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
தான் முன்மொழிந்த 19 உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவை அமைப்பதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேவேளை துணை அதிபர் ராஜினாமா செய்தது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் துணைஅதிபரின் ராஜினமா முடிவு ஈரான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.