ஆபத்தான விளையாட்டு வேண்டாம்... பிரான்ஸ் மக்களுக்கு மிரட்டல் விடுத்த ஈரான்
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேலிச்சித்திரம் வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகைக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாரிஸ் நகரில் செயல்படும் சார்லி ஹெப்டோ வார இதழ் சில நாட்களுக்கு முன்னர் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியை சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறது சார்லி ஹெப்டோ. கார்ட்டூனில் தூக்கில் தொடங்கவிடப்பட்டவர்களுக்கு நடுவில் அயத்துல்லா அலி காமெனி புத்தகம் வாசிப்பதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஈரான் புரட்சிப் படை மூத்த அதிகாரி கடும் கண்டனத்துடன் மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து ஹூசைன் சலாமி தெரிவிக்கையில், இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் தலைவிதியைப் பாருங்கள் என்பதை பிரான்ஸ் மக்களுக்கும், சார்லி ஹெப்டோ இதழுக்கும் கூறிக் கொள்கிறேன்.
இஸ்லாமியர்களுடன் விளையாட வேண்டாம். சல்மான் ருஷ்டி 30 ஆண்டுகளுக்கு முன்பு குரானையும், நபியையும் அவமதித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சார்லி ஹெப்டோ இதழின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தை ஈரான் முடியது. இந்த நிலையில்தான் ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.