இந்த நாட்டு தடுப்பூசிகள் வேண்டவே வேண்டாம்; ஈரான் அதிரடி
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலிருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யபோவதில்லை என்றும் இரு நாடுகளும் நம்பகமானவை அல்ல எனவும் ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
தொலைக்காட்சி உரை ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அத்துடன், நான் இதை ஏற்கனவே அரசாங்க அதிகாரிகளிடம் கூறியுள்லா நிலையில் தற்பொழுது அதை பகிரங்கமாக அறிவிக்கிறேன் என்றும் தெரிவித்த அவர், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
ஈரான் சொந்தமாக உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி தற்போது மனித சோதனையில் உள்ளது. இந் நிலையில், ஈரானிய கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு பெருமைக்கான ஆதாரம் என்றும் அயதுல்லா அலி கமேனி பாராட்டினார். மேலும் எதிர்காலத்தில் நாட்டில் பிற தடுப்பூசி திட்டங்கள் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கமேனியின் அறிவிப்புக்குப் பிறகு, ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி அமெரிக்காவின் ஃபைசர் கொரோனா தடுப்பூசிகளின் இறக்குமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது. அத்துடன் ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி அமெரிக்காவிலிருந்து நாட்டிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி 1,50,000 டோஸ் இறக்குமதி செய்யவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று ஐஆர்சிஎஸ் செய்தித் தொடர்பாளர் முகமது ஹாசன் கோசியன் மொகதாம் ஈரான் அரசு நடத்தும் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மேலும் ஈரானின் சுகாதார, சிகிச்சை மற்றும் மருத்துவ கல்வி அமைச்சகம் கிழக்கு நாடுகளிலிருந்து, தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு கோரிக்கை வந்தால், தேவைப்பட்டால் நாங்கள் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்” என்றும் மொகதாம் மேலும் கூறினார்.