கனடாவில் லாரி மீது ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதி விபத்து 3 பேர் பலி!
கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவு பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஒன்று, கனரக சரக்கு லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு அவசர மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஒரு நோயாளி என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெல்ரோஸ் பகுதியில் உள்ள 'ரூட் 16' நெடுஞ்சாலையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கன்ஃபெடரேஷன் பாலத்தில் இருந்து சுமார் 10 நிமிட தொலைவில் ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு லாரியுடன் நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்ற வாரன் குரோவ் பகுதியைச் சேர்ந்த 56 வயது ஓட்டுநர், மாண்டேக் பகுதியைச் சேர்ந்த 77 வயது பெண் நோயாளி மற்றும் நைன் மைல் கிரீக் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் மருத்துவ உதவியாளர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லாரியை ஓட்டி வந்த ஓட்டுநருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ள போதிலும், அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து குறித்து பிரின்ஸ் எட்வர்ட் தீவின் மாகாண முதல்வர் ராப் லான்ட்ஸ் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இன்று ஒட்டுமொத்த மாகாணமே ஆழ்ந்த துயரத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளது. மற்றவர்களின் உயிரைக் காக்கும் உன்னதப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இரண்டு மருத்துவ உதவியாளர்களை நாம் இழந்துள்ளோம். அவர்களது குடும்பத்தினருக்கும், உயிரிழந்த நோயாளியின் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.