இஸ்ரேல் - ஈரான் பதற்றம் மீண்டும் உச்சம் ; தற்காலிக போர் நிறுத்தம் அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற பரஸ்பர ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, மேற்காசியாவில் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கு ஆதரவு வழங்கும் ஹெஸ்பொல்லா அமைப்பின் நிலைகளை குறிவைத்து, பெய்ரூட் நகரின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது.
இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேலின் இராணுவ நிலைகளை குறிவைத்து பல அதிநவீன ஏவுகணைகளை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து அழித்ததாகவும், அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் பெட்ரோலிய வசதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நேரடி தாக்குதல்களால் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்த நிலையில், டொனால்ட் டிரம்ப் இரு தரப்பும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அமைதிக்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்தினால் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்தத் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதற்கு தற்காலிகமாக இணக்கம் தெரிவித்துள்ளதாக இஸ்ரேல் தரப்பும் கூறியுள்ளது.
இரு நாடுகளும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நிலைமை தொடர்ந்தும் பதற்றமானதாகவே காணப்படுவதுடன், பிராந்தியத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து சர்வதேச சமூகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.