கொரோனாவுக்கான நான்காவது தடுப்பூசி... அறிவித்த பிரபல நாடு
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதுடன் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசி அளிக்க இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து செவ்வாய்க்கிழமை குறித்த தகவலை இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு குழு 4வது டோஸ் தடுப்பூசி தொடர்பில் அரசுக்கு பரிந்துறைத்துள்ளது.
இதை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார் பிரதமர் நஃப்தலி பென்னட். மேலும், உலக நாடுகளில் வியாபித்துவரும் ஓமிக்ரான் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க இது உதவும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், மூத்த குடிமக்களுக்கு உடனடியாக நான்காவது டோஸ் தடுப்பூசி அளிப்பதற்கு இதுவரை சுகாதார நிபுணர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, இஸ்ரேலிய மக்கள் கால தாமதமின்றி, தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் பென்னட் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலில் ஓமிக்ரான் தொற்றால் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த நிலையிலேயே, 60 வயது கடந்த குடிமக்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசி அளிக்கும் முடிவுக்கு இஸ்ரேல் வந்துள்ளது.
இருப்பினும், ஓமிக்ரான் தொற்றால் இறந்தவருக்கு ஏற்கனவே, உடல்நலக் கோளாறுகள் இருந்துள்ளது எனவும், அதன் தாக்கம் காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளதாகவும் செவ்வாய்க்கிழமை மருத்துவமனை தரப்பில் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
இதுவரை 340 பேர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பரவல் தொடர்பில் தகவல் வெளியானதும் உலகின் முதல் நாடாக சர்வதேச எல்லைகளை மூடியது இஸ்ரேல்.
மட்டுமின்றி, அமெரிக்காவில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதை அறிந்ததும், உடனடியாக பயணத்தடை அறிவித்துள்ளது. மட்டுமின்றி, ஜேர்மனி, துருக்கி, இத்தாலி மற்றும் கனடாவுக்கும் பயணத்தடை விதித்துள்ளது இஸ்ரேல்.