தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் ; 18 பேர் பலி, 30 பேர் காயம்
தெற்கு லெபனானில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நபாத்தியா மாவட்டத்தின் பல பகுதிகளை இலக்காகக் கொண்டு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வான்வழித் தாக்குதல்களுக்கு மேலதிகமாக பீரங்கித் தாக்குதல்களும் இடம்பெற்றதாக லெபனான் ஊடகங்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் நான்கு பேர் ஹிஸ்புல்லா அமைப்பினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பதிலடி நடவடிக்கையாக இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
மேலும், ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ச்சியாக போர் நிறுத்தத்தை மீறி வருவதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே, ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாகவும், டாங்கிகள் மற்றும் இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் ஒப்பந்தத்தின் பின்னணியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை, போர் நிறுத்த நிலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தவும், லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கவும் குறித்த ஒப்பந்தம் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தெற்கு லெபனானில் தமது படைகளை நிலைநிறுத்தியுள்ள இஸ்ரேல், ஹிஸ்புல்லா நிலைகளை இலக்காகக் கொண்டு தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.