இஸ்ரேலிய ஆராய்ச்சி மையத்தில் வெடிப்பு சம்பவம் ; பீதியில் உறைந்த மக்கள்
இஸ்ரேலின் ஜெருசலேம் அருகே உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனை தளத்தில் பயங்கர வெடி சத்தத்துடன், வானில் ஏற்பட்ட பெரிய நெருப்பு கோளத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலின், ஜெருசலேம் பகுதியில் உள்ள பெய்ட் ஷேமேக் என்ற நகருக்கு அருகே நேற்று முன்தினம் இரவு பயங்கர வெடி சத்தம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வானத்தில் பெரும் நெருப்பு பிழம்பும், அடர்ந்த புகையும் சூழந்தன.

இந்த வெடி சத்தத்தின் காரணமாக அருகில் இருந்த வீடுகளில் அதிர்வுகள் ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடந்து வரும் அண்டை நாடுகளுடனான சண்டையினால், தங்கள் நாட்டின் மீது எதிரிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என நினைத்து இஸ்ரேலிய மக்கள் பீதியடைந்தனர்.
ஆனால், இந்த வெடிப்பு சம்பவம், இஸ்ரேலிய அரசுக்கு சொந்தமான ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளுக்கான இன்ஜின்கள் தயாரிக்கும் 'டோமர்' என்ற பாதுகாப்புத் துறை நிறுவனத்தின் சோதனை தளத்தில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்நிறுவனம், இது விபத்தோ அல்லது எதிரிகளின் தாக்குதலோ அல்ல என்றும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு சோதனை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்றதொரு மிகப்பெரிய அளவிலான திட்டமிடப்பட்ட வெடிப்பு சோதனை கடந்த 2021ம் ஆண்டிலும் நடந்தது குறிப்டத்தக்கது.