பட்டினி வழிபாட்டுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கென்யாவில் மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினி வழிபாட்டில் கலந்துகொண்ட மக்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 73 என உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய தேவாலயம் அமைந்துள்ள வனப்பகுதியில் பொலிசார் தீவிரமாக தேடி வருவதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
தேவாலயம் அமைந்துள்ள நிலம் போதகர் பால் மெக்கன்சிக்கு சொந்தமானது என்பதுடன், அவர் ஏப்ரல் 14 அன்று பட்டினி வழிபாட்டு முறையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டார்.
800 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் அவரது தேவாலயத்தில் பதிவு செய்தவர்கள் என்றே கூறப்படுகிறது. உலகம் அழியும் முன் பரலோகம் சென்று இயேசுவை சந்திப்போம் என்று நம்பி பட்டினி வழிபாட்டில் கலந்துகொண்டவர்கள் இவர்கள்.
கடந்த வார இறுதியில் மட்டும் ஷகாஹோலா வனப்பகுதியில் உள்ள சவக்குழிகளில் இருந்து 39 உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் தற்போது மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 73 என உறுதி படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்னரே, அந்த தேவாலயத்தில் பொலிசார் சோதனை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். பொலிசார் அந்த இடத்திற்குச் சென்றபோது, நடக்கவோ பேசவோ முடியாத உடல் மெலிந்தவர்களைக் கண்டனர்.
அப்படியானவர்களில் பொலிஸாரால் உயிருடன் காணப்பட்ட 8 பேர் பின்னர் இறந்தனர். அத்துடன் 50 சடலங்களும் மீட்கப்பட்டது. 29 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இருப்பினும் பலர் பொலிசாருடன் செல்ல மறுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இதனிடையே, 112 பேர் காணாமல் போயுள்ளதாக கென்ய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.