லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் இந்தியாவுக்கு தொடர்பா? குற்றச்சாட்டும் கனடா!
கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் அமைப்பபின் தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டிருந்தார்.
இதனால் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்சனை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பூதகரமாகத் தொடங்கியுள்ளது.
இதேவேளை, நிஜ்ஜார் கொலையிலும், கனடாவில் நடக்கும் குற்றச்செயல்கள் பலவற்றிலும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக கனடா புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இதனால் கோபமடைந்த இந்தியா கனடாவில் உள்ள இந்திய தூதர்களை திரும்ப பெறுவதாக நேற்றையதினம் (14-10-2024) அறிவித்தது.
மேலும், இந்தியாவில் உள்ள கனடா தூதர்களையும் வெளியேற்ற முடிவுசெய்துள்ளது.
இந்த கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவோம் என்று கனடா தெரிவித்தது.
இந்த நிலையில் ரவுடி பிஷ்னோய் கும்பலுடன் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், அக்கும்பல் உதவியுடன் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைப்பதாகவும் கனடா புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கனடா பொலிஸ் அதிகாரிகள் மைக் டுஹேன், பிரிஜிட் கவுவின் ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
தெற்காசிய சமூகத்தை இந்தியா குறிவைக்கிறது. குறிப்பாக கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைக்கின்றனர்.
குற்றப் பின்னணி கொண்ட குழுக்களுடன் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா காவல்துறை நம்புகிறது.
காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைக்க லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை இந்திய ஏஜென்சிகள் பயன்படுத்துகிறது.
இந்த குற்ற கும்பலுக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்புகிறோம் என்றனர்.
அப்போது, இந்திய அதிகாரிகள் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றச் சாட்டுகளை கூறுகிறீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஆம் என்று கனடா அதிகாரிகள் பதிலளித்தனர்.