கனடாவில் மென் பானம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடாவில் மென்பான வகை ஒன்றை அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
தாவரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் பால் பான வகைகளை அருந்திய சிலர் நோய் வாய்ப்பட்டதாகவும் அதில் சிலர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் முன்னணி மென்பான உற்பத்தி நிறுவனம் ஒன்றின் உற்பத்திகளை அருந்தியவர்களே இவ்வாறு நோய்வாய் பட்டுள்ளனர்.
இந்த பானத்தை அருந்திய 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பான வகைகளில் லிஸ்திரியா எனப்படும் ஒருவகை பக்றீரியா தாக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சில்க் மற்றும் கிரேட் வால்யூ ஆகிய பண்டக் குறிகளைக் கொண்ட பான வகைகளை உட்கொண்டர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பால்பான உற்பத்தி வகைகள் சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
50 வயதுக்கு மேற்பட்ட பெண்களே அதிக அளவில் இந்த பானத்தை உட்கொண்டதனால் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோ, கியூபிக், நோவாஸ்கோசியா மற்றும் ஆல்பர்ட்டா ஆகிய மாகாணங்களில் இந்த பானத்தை உட்கொண்டவர்கள் நோய்வாய் பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பானத்தை உட்கொண்டு மூன்று நாட்கள் முதல் 70 நாட்கள் வரையிலான காலத்தில் நோய் அறிகுறி ஏற்படும் எனவும் பாதிப்புகள் உண்டாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.